Tuesday, August 17, 2010

உமாசங்கர் பணி நீக்கம் அரசின் பழிவாங்கும் போக்கு

உமாசங்கர் பணி நீக்கம் அரசின் பழிவாங்கும் போக்கு : ஜெயலலிதா

"உமாசங்கரை தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பது தி.மு.க., அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: போலி ஜாதி சான்றிதழை கொடுத்து, அரசு பணியில் சேர்ந்து விட்டார் என்ற காரணத்தை காட்டி, ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த 1990ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கரை தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பது தி.மு.க., அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது. அகில இந்திய பணி நியமனங்கள் அனைத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செய்யப்படுகின்றன. ஐ.ஏ.எஸ்., பணியில் நியமனம் செய்யப்படும் ஒவ்வொருவரின் பூர்வீகம் குறித்த விவரங்களை கண்டறிவதும், அனைத்து சான்றிதழ்களை சரிபார்ப்பதும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு. அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக உமாசங்கர் நியமிக்கப்பட்டார். பின் பழி வாங்கப்பட்டு அரசு கேபிள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.


அரசு கேபிள் நிறுவனமும் செயலிழந்து விட்டது. கோடிக்கணக்கான மக்கள் பணம் விரயமாக்கப்பட்டது. அரசு கேபிள் நிறுவனத்தின் தற்போதைய நிலை என்ன? அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம் எத்தனை பேர் கேபிள் இணைப்பு பெற்றுள்ளனர்? அரசு கேபிள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட 400 கோடி ரூபாய் என்னவாயிற்று? கருணாநிதி குடும்பத்தினரின் அராஜகங்களை வெளிக் கொணர்ந்ததற்காக, ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஏன் பழி வாங்கப்படுகிறார்? இதை தமிழக மக்கள் இன்னும் எத்தனை நாட்கள் தான் பொறுத்துக் கொள்ள வேண்டும்? இதற்கு கருணாநிதி விளக்கம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

thanks - தினமலர்

No comments: